ஈரோட்டில் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

ஈரோட்டில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-10-04 10:30 GMT

ஈரோடு வீரப்பம்பாளையம் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஈரோடு வீரப்பன்பாளையம் அருகிலுள்ள நாராயணா டெக்னோ பள்ளி, நசியனூர் சாலையில் நாரயணவலசு அருகில் செயல்பட்டு வரும் நந்தா சென்ட்ரல் சிட்டி சிபிஎஸ்சி பள்ளி மற்றும் மாணிக்கம்பாளையம் அருகிலுள்ள ஈரோடு பப்ளிக் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வடக்கு காவல்நிலையத்திற்கு மர்ம நபர் மூலம் மிரட்டல் வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, ஈரோடு மாநகர டிஎஸ்பி முத்துகுமரன் தலைமையில் போலீசார் மூன்று குழுவாக பிரிந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பொருட்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல, நாராயணவலசு பகுதியில் உள்ள நந்தா சென்ட்ரல் பள்ளி, மாணிக்கம்பாளையம் அருகிலுள்ள ஈரோடு பப்ளிக் பள்ளியிலும் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் இறுதியில் தான் வெடிகுண்டு மிரட்டலின் உண்மை தன்மை தெரிய வரும் என்பதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மூன்று பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளி என்பதால் வகுப்பறை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News