தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம்: அறச்சலூரில் அமைச்சர், ஆட்சியர் மரியாதை..!
தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினத்தையொட்டி, ஈரோடு அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினத்தையொட்டி, ஈரோடு அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, வாரிசுதாரர்களை கௌரவித்து 167 பயனாளிகளுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தீரன் சின்னமலையின் 219வது ஆடிப்பெருக்கு நினைவு நாள் விழாவினை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசின் சார்பில் இவ்விழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு அமைப்பினரும் அவரது புகழ் வணக்கத்தை தீரன் சின்னமலை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில், இன்று (3ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கலைப்பண்பாட்டு துறையின் இசைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் சின்னமலையின் வாரிசுதாரர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இதனையடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 121 பயனாளிகளுக்கு ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் இ- பட்டாக்களையும், 10 பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட நத்தம் பட்டாக்களை மீண்டு வழங்குவதற்கான ஆணையினையும், இசைப்பள்ளி சார்பில் 30 பயனாளிகளுக்கு கலை சுடர்மணி, கலை வளர்மணி, கலை நன்மணி, கலை இளமணி, கலை முதுமணி விருதுகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.41 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் மானியமும், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும், ஒரு பயனாளிக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் துவரை செயல் விளக்கமும், ஒரு பயனாளிக்கு ரூ.400 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகராட்சி துணை மேயர்ஸவே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாரிசுதாரர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.