பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

விதை பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தை துல்லியமாக கடைபிடித்து, தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்கின்றனர்;

Update: 2023-09-08 10:30 GMT

விதை உற்பத்தி திடலை ஆய்வு செய்த கண்காணிப்புக்குழுவினர்

பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய  விதை உற்பத்தி திடலில், கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

வேளாண் பல்கலை கழகம், வேளா ண் ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றன. அந்த ரகங்களின் கருவிதைகளை கொண்டு, வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் விதை பண்ணைகள் அமைத்து வல்லுனர் விதை உற்பத்தி செய்து, மாநில அரசு விதை பண்ணைகளுக்கு விதை பெருக்கத்துக்காகவும், விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கி வருகின்றனர்.

விதை பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தை துல்லியமாக கடைபிடித்து, தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்ய, வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது. இக்குழு, விதைப்பயிர் பூப்பருவம், அறுவடை பருவம், விதை குவியல், விதை சுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்வர்.

நடப்பு பருவத்தில், பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை பயிரில் பி.எஸ்.ஆர்.2 ரகம், உளுந்து பயிரில் வி.பி.என்.8, வி.பி.என்.9 ஆகிய ரகங்களின் வல்லுனர் நிலை விதை பண்ணைகள் அமைக்கப்பட்டு, விதைப்பின் பூப்பருவம், அறுவடை பருவத்தில் உள்ளன.

இவ்விதை பண்ணையில் பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், உதவி பேராசிரியர்கள் சசிகலா, உத்தராசு, அமுதா, ஈரோடு விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம், பவானிசாகர் விதை சான்று அலுவலர் ஹேமாவதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

விதை பயிர் நடவு முறை, விதை பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு துாரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய் போன்றவற்றை ஆய்வு செய்தனர். தரமான வல்லுனர் விதைகளை உற்பத்தி செய்ய, தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களிடம் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News