பவானிசாகர்: காரில் மது பாட்டில்களை கடத்திய வனவர் பணியிடை நீக்கம்
மதுபாட்டில்களை தமிழக-கர்நாடக எல்லையில் வாங்கி தெங்குமரஹடா பகுதி கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராக பணியாற்றி வருபவர் பெருமாள்(43). சம்பவத்தன்று இவர் ஒரு காரில் பவானிசாகர் நோக்கி சென்றார். அவருடன் பவானிசாகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர் மூர்த்தி (46) என்பவரும் சென்றார்.
அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இவர்கள் சென்ற காரையும் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் 97 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, வனவர் பெருமாள், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, தமிழக-கர்நாடக எல்லையில் வாங்கி தெங்குமரஹடா பகுதியில் உள்ள கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது. வனவர் பெருமாள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மலை கிராமங்களில் தொடர்ந்து மது விற்பனையை தொழிலாகவே செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வனவர் பெருமாள், டாஸ்மாக் விற்பனையாளர் மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பெருமாள் கைது குறித்து முதல் தகவல் அறிக்கையை போலீசார் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி கிருபா சங்கருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வனவர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து கிருபா சங்கர் உத்தரவிட்டார்.