பவானிசாகர் அருகே மது பாட்டில்கள் கடத்திய வனத்துறை அதிகாரி கைது
பவானிசாகர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க காரில் மது பாட்டில்கள் கடத்திய வனத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 97 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. காருக்குள் 2 பேர் இருந்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறை வனவர் பெருமாள் (வயது 43) என தெரிய வந்தது. மற்றொருவர் பவானி சாகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றும் மூர்த்தி (46) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் விசாரணைக்காக பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் 2 பேரும் பவானிசாகர் டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அதை தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரிய வந்தது.இதையடுத்து மது பாட்டில்கள், காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனஅதிகாரி பெருமாள் மற்றும் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.