பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி கிடு கிடு உயர்வு..!

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரேநாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 3.8 அடி உயர்ந்தது.

Update: 2024-07-17 03:00 GMT

பவானிசாகர் அணை.

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரேநாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 3.8 அடி உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். இதன், நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன. 

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் பில்லூர் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மாயாற்றில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (16ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,399 கன‌ அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (17ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,661 கன அடியாக உள்ளது. 

நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் நேற்று காலை 70.93 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 74.73 அடியாக உயர்ந்து, ஒரேநாளில் 3.8 அடி உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 11.34 டிஎம்சியிலிருந்து 13.05 டிஎம்சியாக அதிகரித்தது.

அணையில் இருந்து  பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 500 அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 அடி நீரும், குடிநீருக்கு பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,105 அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.  

மேலும், நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், பவானிசாகர் அருகே உள்ள  தெங்குமரஹாடா கிராமம் வழியாக வரும் மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் படகுகளில் ஆற்றை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Tags:    

Similar News