பவானிசாகர் அணை நீர்மட்டம் 80.32 அடியாக உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் 80.32 அடியாக உயர்ந்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் 80.32 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை தமிழகத்தின் 2வது மிகப்பெரிய மண் அணையாகும். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து, நான்கு நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து நேற்று (18ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19,261 கன அடியாக இருந்த நிலையில், இன்று (19ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,816 ன அடியாக குறைந்தது. அதேசமயம் நேற்று காலை 77.81 அடியாக இருந்த அணை நீர்மட்டம், இன்று காலை 80.32 அடியாக உயர்ந்தது. கடந்த 3 நாளில் மட்டும் அணையின் நீர்மட்டம் 9.32 அடி உயர்ந்துள்ளது.
அதேபோல், அணையில் நீர் இருப்பு 14.55 டிஎம்சியிலிருந்து 15.85 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம், 1,205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.