பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 5 அடி உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 5 அடி உயர்ந்தது.;
பவானிசாகர் அணை முகப்புத் தோற்றம்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 5 அடி உயர்ந்தது.
105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்த நிலையில் தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, பில்லூர் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள குன்னூர், ஊட்டி, குந்தா, பில்லூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 6,574 கனஅடியிலிருந்து 31,944 கன அடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் (நவ.8) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 68.53 அயாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று (நவ.9) வியாழக்கிழமை 70.96 அடியாகவும், இன்று (நவ.10) 73.49 அடியாகவும் உயர்ந்தது (மொத்த உயரம் 105 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 4,982 கன அடியாக இருந்தது. கடந்த 2 நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
பாசனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் 8.2 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.