பவானிசாகர் அணை நீர்மட்டம் இரண்டு நாட்களில் 4 அடி உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4.43 அடி உயர்ந்தது.;
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உயர்ந்து வரும் அணையின் நீர்மட்டம்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4.43 அடி உயர்ந்தது.
தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடி யாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், அணையின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இரண்டு நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (நவ.24) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,574 கன அடி நீர் வரத்தானது. அணையின் நீர்மட்டம் 78.94 அடியாகவும், நீர் இருப்பு, 15.13 டிஎம்சியாகவும் இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் அணை நீர்மட்டம் 74.51 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரண்டு நாட்களில் 4.43 அடி உயர்ந்துள்ளது. அதே சமயம், அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் 21.2 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.