பவானிசாகர் அணை நீர்மட்டம் 3 நாளில் 4 அடி உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாளில் 3.81 அடி உயர்ந்துள்ளது.;
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாளில் 3.81 அடி உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி பவானி ஆறும், மாயாறும் உள்ளன. இங்கு மழை பெய்யும்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று (ஜூன்.27) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,781 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.28) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,894 கன அடியாக சரிந்தது.
கடந்த 25ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.63 அடியாக இருந்தது. தற்போது, அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் இன்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 62.44 அடியாக உயர்ந்தது. அதாவது, கடந்த 3 நாட்களில் 3.81 அடி வரை உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் பில்லூர் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.