பவானிசாகர் அணை நீர்மட்டம் 80 அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 80.90 அடியாக சரிந்தது.;
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 80.90 அடியாக சரிந்தது.
தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 458 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 522 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும், அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 80.90 அடியாக சரிந்துள்ளது.
வியாழக்கிழமை (ஜன.18) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 80.90 அடி ,
நீர் இருப்பு - 16.16 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 522 கன அடி ,
நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,900 கன அடி ,
பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,100 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.