பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,192 கன அடியிலிருந்து 761 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2024-05-19 04:30 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,192 கன அடியிலிருந்து 761 கன அடியாக குறைந்துள்ளது.

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது வந்தது.

இந்நிலையில், தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (மே.18) சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,192 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.19) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 761 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 44.58 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 44.86 அடியாக சற்று உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 3.31 டிஎம்சியாக உள்ளது. மேலும், பவானிசாகர் பகுதியில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி 2.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News