100 அடியை நெருங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் விரைவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-08-13 03:00 GMT

பவானிசாகர் அணைப் பகுதி.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (13ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 96 அடியைத் தாண்டியது. 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குவது கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணை முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாகவும் உள்ளது.

நேற்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,781 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (13ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,218 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.82 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96 அடியைத் தாண்டி 96.01 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, அணைக்கான நீர்வரத்து அதிகரித்தால் விரைவில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.58 டிஎம்சியிலிருந்து 25.71 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக மொத்தம் வினாடிக்கு 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News