பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 321 கன அடி..!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஜூன்.20) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 321 கன அடியாக அதிகரித்துள்ளது.;
பவானிசாகர் அணை.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.19) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 227 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.20) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 321 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.06 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 58.08 அடியாக உயர்ந்தது. அப்போது, நீர் இருப்பு 6.65 டிஎம்சியாக இருந்தது.