பவானி கோவில் தலைமை அர்ச்சகர் பாதுகாப்பு கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு
பவானி சங்கமேஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் பாலாஜி சிவம் சிவாச்சாரியார், பாதுகாப்புக் கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார்.
பவானி சங்கமேஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் பாலாஜி சிவம் சிவாச்சாரியார், தன் உயிருக்கு உரிய பாதுகாப்பு கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனுவில், கோவில்களில் பாரம்பரியமாக கும்பாபிஷேகம், பூஜைகள் நடத்த தம்மைப் போன்ற சிவாச்சாரியார்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சமீபகாலமாக சில பகுதிகளில் சிவாச்சாரியார்கள் என்ற பெயரில் சிலர் இதுபோன்ற பணிகளை செய்தனர். விசாரணையில், அவர்கள் பிற சாதியை சேர்ந்தவர்கள் என்பதும், அங்கீகரிக்கப்பட்ட சாதியான சிவாச்சாரியார்கள் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றுவதும் தெரியவந்தது.
எனவே, அகில பாரத ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் என்ற பெயரில், சமூக வலைதளங்களில் சிவாச்சாரியார்கள் என்ற பெயரை தவறாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டேன். இதையடுத்து, தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி, கடந்த சில நாட்களாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து, பிராமணர்கள் என்ற போர்வையில் இவரது வீட்டைத் தாக்க முயன்றனர்.
இதுகுறித்து, பவானி காவல் நிலையத்தில் ஒரு மனுவும், சிசிடிவி கேமரா காட்சிகள், குரல் பதிவு போன்றவற்றை விசாரணைக்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். தேவையானதை எஸ்.பி. செய்வதாக உறுதியளித்துள்ளார், என்றார்.
இதுதொடர்பாக, அவரது வழக்கறிஞர் சூர்யகண்ணன் கூறுகையில், சிவாச்சாரியார் பெயரை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவது ஐபிசி பிரிவு 416-ன்படி குற்றமாகும். மேலும், அவரை தொலைபேசி மூலம் மிரட்டுவதும் ஐபிசி 506-ன்படி குற்றமாகும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்