பவானி ஓடத்துறை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஈரோடு ஆட்சியர் பங்கேற்பு
பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடத்துறை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.
பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடத்துறை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று (2ம் தேதி) நடந்தது. இந்த கூட்டத்துக்கு, ஓடத்துறை ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையாளராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு, மகளிர் திட்ட திறன் பயிற்சி, சமூக நலத்துறையின் சார்பில் இளவயது கர்ப்பம், இளவயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடுகள், வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசனம், மண்ணுயிர் காப்போம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு, தொழு நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் திட்ட பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து, ஓடத்துறை ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து, காப்புரிமை மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய மருந்து பெட்டகத்தினை வழங்கி, மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார்.
முன்னதாக, ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு தொடர்பான உறுதிமொழியினையும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) வெங்கடேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை, மகளிர் திட்ட அலுவலர் பிரியா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.