பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சிக்கிய ரூ. 2.10 லட்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை..
பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனையின்போது ரூ. 2.10 லட்சம் சிக்கியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அன்பளிப்பு பெறுவதாகவும், பணம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்தது. இதையெடுத்து, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அரசு அலுவலகங்களில் இருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போஸாசார் அதிரடி சோதனையை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ .2.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி - மேட்டூர் பிரதான சாலையில் ஊராட்சிக்கோட்டை மலை அடிவாரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக சுகந்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ், ஆய்வாளர் ரேகா, உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் இன்று மாலை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி உட்பட ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களில் சிலர் கையில் வைத்திருந்த பணத்தை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசினராம். அதைக் கண்ட போலீஸார் வீசப்பட்ட பணத்தையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் வைத்திருந்த பணத்தையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், இடைத்தரகர்கள் சிலரிடம் அதிக அளவில் பணம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவித கணக்கிலும் வராத பணம் ரூ. 2.10 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனையானது சுமார் 5 மணி நேரம் நீடித்தது. பின்னர், அலுவலகக்தில் இருந்த ஆவணங்களை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சரிபார்த்தனர். கணக்கில் வராத பணம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி மற்றும் புரோக்கர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றதாலும், கணக்கில் வராத பணம் பற்றிய சோதனை குறித்தும் தகவல் பரவியதால் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.