பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை

பவானி அருகே அம்மாபேட்டையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-10-07 12:15 GMT
தற்கொலை செய்து கொண்ட காவலர் செல்வக்குமார்.

பவானி அருகே அம்மாபேட்டையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை  அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 34). இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் காவல் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த வாகனங்களை சோதனை செய்த போது காவலர் செல்வக்குமார் குடிபோதையில் ஓட்டுநர் ஒருவரிடம் பணம் கேட்டு அடித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்த, காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து அறிந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் விசாரணை நடத்தினார். பின்னர், காவலர் செல்வக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, செல்வக்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் செல்வக்குமாரின் உறவினர்கள் அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே அம்மாபேட்டை - பவானி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News