மான் இறைச்சி கடத்த முயன்றவரிடம் பேரம்: 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்
தாளவாடி அருகே மான் இறைச்சி கடத்த முயன்றவர்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் 3 உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தாளவாடி அருகே மான் இறைச்சி கடத்த முயன்றவர்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் 3 உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ரத்தினம் (வயது 52), சிறப்பு உதவி ஆய்வாளர்களாக கோபால் (வயது 48), பாலசுப்பிரமணியம் (வயது 51) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி எரகனள்ளி கிராமத்தில் இவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மான் இறைச்சி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் எரகனள்ளி கிராமத்தைச் சேர்ந்த எஸ்வந்த் (வயது 26), மணிகண்டன் (வயது 29) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியை கடத்திக்கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் 2 பேருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் மான் இறைச்சி கடத்தி வந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க உதவி காவல் ஆய்வாளர் ரத்தினம், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் கோபால், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் 3 உதவி காவல் ஆய்வாளர்கள் தாளவாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, பணி இடமாற்றம் செய்யப்பட்ட 3 காவல் உதவி ஆய்வார்களிடம் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேற்று உத்தரவிட்டார்.