பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்
பவானி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம் பவானி சுற்று வட்டாரப்பகுதியில், நேற்று இரவு முதல், நள்ளிரவு வரை சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் காடப்பநல்லூர் ஊராட்சியில் வரதராஜன் என்பவரது தோட்டத்தில் சாகுபடிக்கு தயாராக இருந்த 1500-க்கும் மேற்பட்ட செவ்வாழை ரக வாழை மரங்கள் சாய்ந்தன. குறிச்சி ஊராட்சியில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிரிட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த 2000-க்கும் மேற்பட்ட கதளி ரக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து வாழைத்தார்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்தன.
இதே போன்று கல்பாவி ஊராட்சியில், சந்துரு என்பவர் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு இருந்த நான்காயிரம் வாழை கன்றுகள் நேற்று பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில், தற்போது இயற்கை பேரிடரால் 10லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.தொடர்ந்து வேளாண்மை துறையினர் முறையாக ஆய்வு நடத்தி சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.