டி.என்.பாளையம் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு 'குவா குவா'
கோபிசெட்டிபாளையம் அருகே, ஆம்புலன்சில் கூலி தொழிலாளி மனைவிக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலித்தொழிலாளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி பூங்கோதைக்கு (வயது 24). இவருக்கு நேற்று காலை பிரவச வலி ஏற்பட்டது. இது குறித்து டி.என்.பாளையம் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம், பூங்கோதையை ஏற்றிக் கொண்டு டி.என்.பாளையம் நோக்கி சென்றது. அரக்கண்கோட்டை அருகே வந்தபோது பூங்கோதைக்கு பிரசவ வலி அதிகமானதால் சாலையோரம் 108 ஆம்புலன்ஸை நிறுத்திய மருத்துவ ஊழியர்கள், பூங்கோதைக்கு பிரசவம் பார்த்தனர்.
இதில், பூங்கோதைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து தாயும் சேயும் தாசப்பகவுண்டன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பிரசவ வலியால் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜெயஸ்ரீ மற்றும் வாகன ஓட்டுநர் இளவளகன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.