நாளை ஆயுதபூஜை: ஈரோட்டில் பூக்கள்-பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்..!
நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் பூக்கள் - பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் பூக்கள் - பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர், பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், மா, வாழை இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது.
ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் பழங்கள், வாழை தோரணங்கள் உள்ளிட்ட கடைகள் அதிகளவில் வைத்து இருந்தனர். இதேபோல், மா இலைகளை பலர் ரோட்டோரங்களில் விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர். மேலும் கடை வீதி பகுதி ரோட்டோரங்களில் வியாபாரிகள் பொரி, கடலை மற்றும் வாழை தோரண கடைகளும் வைத்து இருந்தனர். இதனால் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நேரம் செல்ல, செல்ல பொதுமக்கள் பலர் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி, பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.20-30க்கும், 100படி கொண்ட 1 மூட்டை பொரி ரூ.750-850க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை 1 கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மாநகரின் பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பழ கடைகள், பொரிகள் தான் அதிகளவில் தென்பட்டது. இதேபோல் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, சென்னிமலை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடை விதி பகுதிகளிலும் இன்று மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் வந்து இருந்தனர். இதனால், இன்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
மேலும், ஈரோடு பேருந்து நிலைய பகுதியில் உள்ள மொத்த பூக்கடைகள் மற்றும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் அரளி, சம்பங்கி மற்றும் துளசி உள்ளிட்ட பூக்களின் விற்பனை வழக்கத்தை விட அதிகளவில் நடந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.