ஈரோட்டில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின் பேரிலும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் பேரிலும், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நியமன அலுவலர் தங்க விக்னேஷ் பேசியதாவது, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் திரும்ப உபயோகிப்பதால் கேன்சர் போன்ற தீமைகள் ஏற்படும் எனவும், அதனை உரிய முறையில் மறுசுழற்சி செய்து அதனை சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் பயோ டீசல் ஆக மாற்றம் செய்வது குறித்து துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து, உணவு தயாரிப்பவர்கள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுபடி பயன்படுத்தாமல் அதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைத்து பொதுமக்கள் நலன் காப்பது நம் கடமையாகும். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த நிதி ஆண்டில் 81 டன் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்வதற்காக பெறப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இதனையடுத்து, சமையல் எண்ணை மறுசுழற்சி சம்பந்தமான சிறந்த பங்கேற்பு செய்ததற்காக துறை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தன்னார்வலர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டுகள் அணிந்தும், கைப்பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் விநியோகித்தும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஈரோடு மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.