செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-21 10:30 GMT

புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

அந்தியூர் அருகே உள்ள செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு பாதுகாப்பான குடிநீர் உபயோகிப்பதின் அவசியம் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, இளம் வயது திருமணத்தால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவகால தாய் சேய் மரணங்கள் குறை பிரசவங்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பிறத்தல், பெண் கல்வி பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பான குடிநீரின் அவசியம் அதனால் தடுக்கப்படும் நோய்கள், கை கழுவும் முறைகள், குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதின் அவசியம், ஓஆர்எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், டெங்கு தடுப்பு பணியில் மாணவர்களின் பங்கு குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், தலைமை ஆசிரியை மற்றும் இரு பால் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் 350 பேர்கள் கலந்து கொண்டனர். முகாமின், இறுதியில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

Tags:    

Similar News