ஈரோட்டில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரித்து விற்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்
Erode news- ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
Erode news, Erode news today- ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை ஆணையகம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட முழுவதிலும் உள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளருக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் பேசியதாவது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளர் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயமாக பார்வைக்கு வைத்திருக்க வேண்டும்.
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட பிறகே விற்பனை செய்தல் வேண்டும். உணவு பொருட்கள் கையாளுபவர்கள் கையுறை, முககவசம், தலைகவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செயற்கை வண்ணங்கள் பயன்படுத்துதல் கூடாது. உணவுகையாளுபவர்கள் அனைவரும் மருந்துவ சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மறு உபயோகம் செய்தல் கூடாது. மாறாக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட பயோடீசல் மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்கி அதன் ஆவணங்களை வைத்திருந்தல் வேண்டும்.
மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.