பவானியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம்
பவானி அருகே உள்ள ஆண்டிக்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
பவானி அருகே உள்ள ஆண்டிக்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (27ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரம் ஆண்டி குளம் ஊராட்சியைச் சேர்ந்த காடையாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், புகையிலை மற்றும் போதைப் பழக்கத்தால் ஏற்படும் இளைய சமுதாயத்தின் சீரழிவுகள், புகையிலை பயன்பாட்டினால் அதிகரித்து வரும் மரண விகிதங்கள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை மற்றும் போதை பழக்க மீட்பு ஆலோசனை, 2009ம் வருடத்திற்கு முன்பு பிறந்தவர்களின் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்வதற்கான அரசு வழங்கியுள்ள வாய்ப்பு குறித்தும் விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் 65 நபர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில், அனைவருக்கும் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, அனைவராலும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.