கொடுமுடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கொடுமுடி அருகே சாலைப்புதூரில் ஏடிஎம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2023-09-13 12:21 GMT

கொடுமுடி அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலைப்புதூரில் அமைந்துள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை (இன்று) காலை அந்த பகுதி சேர்ந்த மக்கள் வழக்கம் போல் பணம் எடுப்பதற்காக அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்றனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் பார்வையிட்டபோது, நள்ளிரவில் அந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். ஏடிஎம் மையத்தில் உள்ள லாக்கரை உடைக்க முயன்ற போது முடியாததால் மர்ம நபர்கள் திரும்பி சென்று விட்டனர். இதனால் ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் தப்பியது.

மேலும், ஏடிஎம் மையத்தில் இரவு நேர காவலாளி மற்றும் அலாரம் இல்லாததை நன்கு தெரிந்து கொண்ட நபர்கள் திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News