ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு
ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா பாராட்டி பரிசளித்தார்.;
ஈரோடு மாவட்டத்தில் நாற்பத்தி நான்கு 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 33 பேசிக் லைப் சப்போர்ட, 8 அட்வான்ஸ் லைப் சப்போர்ட், 2 பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் மற்றும் 1 பைக் ஆம்புலன்ஸ் என மொத்தம் 44 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் அவசரகால மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு பகல் என ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் விபத்து, வலிப்பு, நெஞ்சுவலி, விஷ முறிவு மற்றும் பல்வேறு விதமான நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இவ்வாறாக, முதலுதவி சிகிச்சை அளித்து சிறப்பாக செயல்பட்ட அவசரகால மருத்துவ உதவியாளர் மகாதேவன் மற்றும் ஓட்டுநர் சனாவுல்லா ஆகியோரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா பாராட்டி பரிசளித்து கௌரவித்தார்.
அப்போது, ஈரோடு மாவட்ட மேலாளர்கள் கவின், அம்பிகாசன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.