ஈரோட்டில் 26 போலீசாருக்கு பணி நியமன சான்றிதழ்: எஸ்.பி., ஜவஹர் வழங்கல்
ஈரோட்டில் 26 போலீசாருக்கு பணி நியமன சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வழங்கினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ரூ.18,200 முதல் 67,100 வரை ஊதிய விகிதத்தில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியில் காலியாக உள்ள 3552 இடங்களுக்கான தேர்வு 2022-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 2,180 (654 பெண்கள் உட்பட), தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,091, இரண்டாம் நிலை சிறை காவலர் பணிக்கு 161 (8 பெண்கள் உட்பட) மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு 120 பேர் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்த தேர்வாளர்களுக்கு எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தகுதியுள்ள தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேரில் வரவழைத்து தமிழக முதல்வர் பாராட்டி பணி நியமன ஆணை வழங்கினார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) 26-ம் தேதி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்திலிருந்து காவல் துறை பணிக்கு தேர்வான 18 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 26 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பாராட்டி, பணி நியமன சான்றிதழ் வழங்கினார். மேலும், காவல் துறையில் உள்ள பணிகள், சிறப்புகள் பற்றி விளக்கி கூறி அறிவுறுரைகள் வழங்கியுள்ளார்.