ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-10-14 14:15 GMT

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி செவிலியர்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு செய்தனர்.

தேர்தல் வாக்குறுதியின்படி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 1500 செவிலியர் பணியிடங்களை எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும். மகப்பேறு விடுப்பிற்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும். பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பாலியல் குற்றங்களை விசாரிக்க அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில தலைவர் ஜி.சசிகலா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ச.விஜயமனோகரன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன் நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயசுகி, மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News