கோபி மொடச்சூரில் காச நோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
கோபி மொடச்சூரில் காச நோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
கோபி மொடச்சூரில் காச நோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (6ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் அயலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மொடச்சூர் ஊராட்சியைச் சேர்ந்த வடுகபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு காசநோய் ஒழிப்பு, வயிற்றுப்போக்கு நோய் தடுப்பு, புகையிலை மற்றும் போதை பழக்க எதிர்ப்பு, இளம் வயது திருமண எதிர்ப்பு டெங்கு தடுப்பு, விலங்குகளால் பரவும் நோய்கள் குறித்து சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம் அதன் உடல் பாதிப்புகள், காச நோயின் வகைகள், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக கிடைக்கும் இடங்கள், வயிற்றுப்போக்கு நோய்க்கான காரணிகள் அதற்கான தடுப்பு முறைகள், இரு மாத கால வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமின் அவசியம், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள், விலங்குகளால் பரவும் நோய்கள் அதற்கான பாதுகாப்பு முறைகள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பெண் கல்வி பாதிப்புகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவகால தாய் சேய் மரணங்கள், கருச்சிதைவுகள், குறைமாத பிரசவம், ஊட்டச்சத்து இல்லா குழந்தை பிறத்தல், பெண்களுக்கு ஏற்படும் சமூக பின்னடைவுகள், வைட்டமின் ஏ சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் உடல் பாதிப்புகள், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்களின் இடங்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், அயலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஓம் பிரகாஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் வேலுமணி, கைலாசம், சேதுராமன், சுகந்த், மோனிஸ்வரன், சிவா, சக்திவேல், சுஜித், கிரண்,செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் 85 பேர்கள் கலந்து கொண்டனர்.