பவானியில் தொழிலாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரம் ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீராம் டையிங் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு, டெங்கு தடுப்பு மற்றும் பாதுகாப்பான குடிநீரின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீங்குகள், உடல்நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் மரண விகிதங்கள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம் அதன் பயன்கள், குடிநீர் சேமித்து வைக்கும் மேல்நிலைத் தொட்டிகள், தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டியதின் அவசியம், வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணிகள் அதற்கான தடுப்பு முறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் கோகுலகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள், செவிலியர்கள் மற்றும் தொழிலாளர்கள் 110 பேர்கள் கலந்து கொண்டனர்.