வெடி விபத்தில் வெல்டிங் ஊழியர் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல்

அந்தியூர் அருகே வெடி விபத்தில் வெல்டிங் ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முன்பு சாலை மறியல் போராட்டம்.

Update: 2021-09-27 08:00 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொமராயனூர் பகுதியில் நேற்று பட்டாசுகள் வெடித்து வெல்டிங் ஊழியர் வெற்றிவேல் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தீயூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றிவேல் பட்டாசுகள் வெடித்து உயிரிழக்கவில்லை என்றும் வேறு வெடிபொருட்கள் வெடித்து தான் உயிரிழந்துள்ளார் எனக்கூறி வெற்றிவேலின் உறவினர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டாட்சியர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் உமா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வேறு வெடி பொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டு இருப்பின் வீட்டின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த வெற்றிவேல் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து சமாதானமடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்தியூர் பர்கூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News