அந்தியூரில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு: அலறியடித்து ஓடிய இளைஞர்
அந்தியூரில் இளைஞர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த கொம்பேறிமூக்கன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.;
இரு சக்கர வாகனத்தில் இருந்த பாம்பு.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி அலுவலத்தின் பின்புறம் வசித்து வருபவர் ஜாவித். இவருக்கு சொந்தமான மொபட் வண்டி ஒன்று உள்ளது.
இன்று காலை மொபட்டை எடுத்துக்கொண்டு அந்தியூர் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதியிலிருந்து பாம்பு ஒன்று அவ்வப்போது தலையை வெளியே நீட்டுவதும், உள்ளே இழுத்துக் கொள்வதுமாக இருந்தது.
இதனைக்கண்டு பயந்துபோன ஜாவித், அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள கிருஸ்துவ ஆலயம் முன்பு, இரு சக்கர வாகனத்தை ரோட்டில் சாய்த்து விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் ஜாவித் நடந்ததை கூறினார். அங்கிருந்தவர்கள் இரு சக்கர வாகனத்தை புரட்டி போட்டு, வாகனத்தில் மறைந்திருந்த பாம்பை தேடினர்.
பாம்பு வெளியே வராததால், அப்பகுதியில் இருந்த டீக்கடை ஒன்றில் வாங்கி வந்த சுடுதண்ணீரை வாகனத்தின் முன் பகுதியில் ஊற்றினர். அப்போது, சூடு தாங்ககாமல் வாகனத்தில் இருந்த கொம்பேறிமூக்கன் பாம்பு வேகமாக வெளியேறியது. உடனே அங்கு குச்சியுடன் தயாராக நின்று கொண்டிருந்தவர்கள் சுமார் இரண்டடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை அடித்து கொன்றனர்.
அதன்பின், வாலிபர் ஜாவித் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றார். இரு சக்கர வாகனத்தில் பாம்பு உள்ளதாக பரவிய தகவல் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.