செக்டேம் நிரம்பி குடியிருப்புகளில் தண்ணீர்: சோதனை ஓட்டத்தில் சோகம்
அந்தியூர் அருகே, சோதனை ஓட்டத்தின் போது செக்டேம் நிரம்பி, திடீரென குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக பைப் லைன் மூலம் மாத்தூர் பகுதியில் உள்ள விவசாய பாசனத்திற்காக தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை ஓட்டத்தின் போது, கொண்டு வரப்படுகிற தண்ணீரானது அங்குள்ள வாய்க்காலில் விடப்படுகிறது. அவ்வாறு வாய்க்காலில் விடப்படும் தண்ணீர், வெள்ளித்திருப்பூர் பாரதிநகர் அருகே அமைந்துள்ள செக்டேமை வந்தடைகிறது.
இந்நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்த காரணத்தால், பாரதி நகர் செக்டேம் முழுவதுமாக நிரம்பி, அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததுள்ளது. இதனால், அப்பகுதியினர் சிரமத்திற்குள்ளாகினர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள், அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், செக்டேமின் ஒரு பகுதியை சற்று உடைத்து, தண்ணீரை வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் தேங்கியிருந்த நீரானது வடியத் தொடங்கியது.