அந்தியூர் பர்கூர் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
அந்தியூர் பர்கூர் சாலையில் செட்டி நொடி என்னுமிடத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது.
அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பர்கூர் வழியாக அன்றாடம் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த 15 நாட்களாக பர்கூர் வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பர்கூர் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் தமிழக கர்நாடக எல்லைகளை இரணைக்கும் பர்கூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பர்கூர் காவல்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் செட்டி நொடி என்னுமிடத்தில் இரண்டு பெரிய பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் தமிழக கர்நாடக எல்லைகளை இணைக்கும் பர்கூர் வழியிலான சாலை முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், இது சம்பந்தமாக வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பாறைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.