அந்தியூர்: பேருந்துகள் இயங்காததால் வெறிச்சோடிய பேருந்து நிலையம்
அந்தியூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் அவதிக்குள்ளாகினர்.;
நாடு முழுவதும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக இன்றும் நாளையும், அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மத்திய அரசுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தொழில் துறையை தனியார்மயமாக்க கூடாது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் இன்று நடைபெற்ற நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
மேலும் அந்தியூரில் உள்ள 90 சதவீத வங்கிகள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், ஊழியர்கள் வங்கிப் பணியில் ஈடுபடவில்லை.
இதேபோல் அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். அந்தியூரை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் 100% இயக்கப்படாததால் பொதுமக்களும் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.
மேலும் வங்கி வந்த பொதுமக்கள் பரிவர்த்தனை எதுவும் நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடி போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 5 பேருந்துகளும், அந்தியூர் பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன.