நிரம்பி வழியும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையினை பார்வையிட்ட எம்எல்ஏ
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நேற்று இரவு நிரம்பியது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்தியூர் அருகே உள்ள கல்லுப்பள்ளம், கும்பரவானி மற்றும் வரட்டுப்பள்ளம் ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 11 மணியளவில் வரட்டுப்பள்ளம் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடியை எட்டியது. அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரி நீர் வெயியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வலது மற்றும் இடதுகரை வழியாக அந்தியூர் மற்றும் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதனையடுத்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று மதியம் வரட்டுப்பள்ளம் அணையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அணையின் இடது மற்றும் வலது கரையினை பார்வையிட்ட எம்எல்ஏ நீர்வழி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அணையிலிருந்து நீர் வெளியேறுவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமாரிடம் அறிவுறுத்தினார்.