காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
அந்தியூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள பழைய மேட்டூரை சேர்ந்த துரைசாமி என்பவரது மகள் கிருஷ்ணவேணி. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த ஐந்துபனை என்ற இடத்தை சேர்ந்த இந்திரன் என்பவரின் மகன் கோகுல்நாத் 24. கோகுல்நாத் தனது பாட்டி வீடான அந்தியூர் அருகேயுள்ள புதுமேட்டூரில் தங்கி, அந்தியூர் சார் பதிவாளர் அலுவலத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கோகுல்நாத் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணியுடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்து, கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதல் விவகாரம், கிருஷ்ணவேணியில் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், நேற்று வீட்டை வெளியேறிய காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து, இன்று காலை அந்தியூர் காவல் நிலையம் வந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். கிருஷ்ணவேணியின் உறவினர்களும், கோகுல்நாத்தின் உறவினர்களும் காவல் நிலையத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.