பர்கூர் மலைப்பாதையில் ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பர்கூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து தடைபட்டது

Update: 2021-11-09 00:00 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில்,  கடந்த சில நாட்களாக மிதமான முதல்,  கனமழை பெய்தது. இந்நிலையில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் மலைப்பாதையில், நெய்கரை என்ற இடத்தில்,  நேற்று மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிவால், ராட்சத பாறைகள் சாலையின் நடுவே உருண்டு விழுந்தன.

இதனால், தமிழக-கர்நாடக இடையிலான போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மண்சரிவால், வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் உள்ள வன சோதனைச்சாவடியில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் மறுபுறம் பர்கூர் காவல் நிலைய சோதனைச் சாவடியிலும், தாமரை கரையிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டன. தகவலறிந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், சம்பவ இடத்திற்கு சென்று,  மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். தற்போது, சாலையின் ஒரு புறத்தில் மண்ணை அகற்றியதால், இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


வனச்சோதனை சாவடியில்,  அந்தியூர் போக்குவரத்து போலீசாரும், ராட்சத பாறைகள் உருண்டு விழுந்த இடத்தில் பர்கூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராட்சத பாறைகளை, உடனடியாக அகற்றுவது கேள்விக்குறி என்பதால், பர்கூர் வழியாக அந்தியூர் வருவோரையும், அந்தியூரில் இருந்து பர்கூர் செல்வோரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மலை பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அந்தியூர் சந்தைக்கு வந்த பொதுமக்களும் வீடு திரும்ப முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News