பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-11-10 16:30 GMT

பர்கூர் மலைப்பாதை.

பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். கனமழை முடிவு பெற்று நிலைமை சீராகும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பர்கூர் செல்லும் மலைப்பாதை சாலையில் நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டதால், ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை வனத்துறை காவல்துறை மற்றும் மின்சாரத்துறையில் தொடர் மீட்பு பணியில், ராட்சத பாறை நேற்று வெடிவைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இலகுரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள், பர்கூர் வழியாக மைசூர் செல்லும் சாலையில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக, அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக மைசூர் செல்லும் மலைப்பாதை சாலையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி பிறப்பித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள், அத்தியாவசிய போக்குவரத்து இயக்கத்திற்கு தடை இல்லை என்றும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News