அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது.பர்கூர் கிழக்குப் பகுதியில் உள்ள வழுக்குப் பாறையில் பெய்த மழையால் எண்ணமங்கலம் ஏரி நிரம்பி வழிகிறது.
அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் உபரிநீர் அந்தியூர் பெரிய ஏரிக்கு வெளியேறி வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பர்கூர் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஏரி நிரம்பி உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு வெளியேறி வருகிறது.
வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம், செல்லம்பாளையம் எண்ணமங்கலம் இணைப்பு பாலத்தை மூழ்கடித்து செல்கிறது.
எண்ணமங்கலம் பகுதியில் பெய்த கன மழையால், எண்ணமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாரதி நகர் பள்ளத்தின் பாலத்தை ஒட்டி செல்கிறது.
முத்தரசன்குட்டை பாலம், மூலக்கடை பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.