பசுமையாக மாறிய பர்கூர் மலைப்பகுதி- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் மழையால் பர்கூர் மலைப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.;

Update: 2021-11-04 03:49 GMT

பசுமையாக காட்சி அளிக்கும் பர்கூர் மலைப்பகுதி

அந்தியூர் அடுத்த பர்கூர் மலை மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். பரந்து விரிந்து காணப்படும் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதனால் பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழைநீர் வரட்டுப்பள்ளம் அணைக்கு சென்றது. கடந்த மாதம் 22-ந் தேதி அணை தன் முழு கொள்ளளவான 33.48 அடியை எட்டியது.மேலும் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பியுள்ளன. காட்டாறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் பர்கூர் வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் தண்ணீர் பிரச்சினையும் தீர்ந்துள்ளது 

இந்தநிலையில் தொடர் மழையால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் துளிர்த்துள்ளன. மரங்கள் புதிய இலைகளை விட்டுள்ளது. புற்கள் முளைத்து பல மேய்ச்சல் நிலங்கள் காணப்படுகின்றன. மொத்தத்தில் பர்கூர் மலைப்பகுதியே பசுமை போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது.

இதுமட்டுமின்றி தொடர்மழையால் காட்டாறுகள் பாய்ந்த வெள்ளம், பாறை இடுக்குகளில் வழிந்தோடி பல திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. மலை முகடுகளில் மேக கூட்டங்கள் நின்று செல்கின்றன. ஊட்டி, கொடைக்கானலை போல் குளிர்ச்சி நிலவுவதால் பர்கூர் மலை அழகை காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News