தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்
அந்தியூர் வேம்பத்தி அருகே கூத்தம்பூண்டியில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு நான்கு பேர் கைது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதே பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையோரம் ரத்தகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த மர்மநபர்களை தேடி வந்தனர்.
கொலையாளிகள் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் அண்ணாதுரையை கொலை செய்ததாக கூறி கூத்தம்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது24), ஸ்ரீதர் (21), கவின்குமார்(24), பரமேஸ்வரன் (25) ஆகியோர் நேற்று மதியம் ஆப்பக்கூடல் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் முன் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் கிராம் நிர்வாக அதிகாரி ஆப்பக்கூடல் போலீசில் ஒப்படைத்தார். போலீசாரிடம் அவர்கள்அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு: கூத்தம்பூண்டி பவானி ஆற்றில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தோம். இந்த நிலையில் சம்பவத்தன்று கரையில் வைத்திருந்த எங்கள் மீன்வலையை காணவில்லை. அண்ணாதுரை வலையை திருடி ஆற்றில் மீன்பிடித்து வந்தது தெரியவந்தது.
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். சம்பவத்தன்று அவர் ஆற்றுக்கு மீன் பிடிக்க வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். அதேபோல் அண்ணாதுரை ஆற்றுக்கு2 வலையுடன் மீன்பிடிக்க வந்தார். அப்போது நாங்கள் மதுபோதையில் இருந்தோம். இந்நிலையில் நாங்கள் 4பேரும் சேர்ந்து மரக்கட்டையால் அண்ணாதுரை தலை மீது ஓங்கி அடித்தோம். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து இறந்தார். கொலை நடந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பித்து சென்று யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருந்து வந்தோம்.
எனினும் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனால் எங்களை எப்படியும் போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என பயந்து கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தோம்.இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர்கள் 4 பேரும்கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டனர்.