5 நாட்களுக்கும் மேலாக மலைப்பாதையில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு
சேதமடைந்த சாலையை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால், 5 நாட்களுக்கும் மேலாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தாமரைக்கரை செல்லும் சாலையில் செட்டிநொடி என்ற இடத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்படைந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மண்சரிவை தொடர்ந்து, அதே இடத்தில் சாலை விரிசல் அடைந்து சேதம் அடைந்ததால், போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. அப்பகுதியில் முகாமிட்ட நெடுஞ்சாலைத் துறையினர், சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மலைப் பாதையில் அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அந்தியூர் நெடுஞ்சாலைத்துறையினர், செட்டிநொடி இடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த சாலையை, கற்களைக் கொண்டும், மண் மூட்டைகளை அடுக்கியும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்து இல்லாததால், மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரு சக்கர வாகனங்களிலும், பிக்கப் மற்றும் சரக்கு வாகனங்களிலும் பயணம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி கர்நாடகா செல்லும் கனரக வாகனங்களுக்கும் அனுமதி இல்லாததால், மாற்றுப் பாதையாக சத்தியமங்கலம் மலைப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.