தண்டு வடம் முறிந்த நபரை சிகிச்சைக்கு சென்னை அனுப்பி வைத்த எம்எல்ஏ
தண்டுவட எலும்பு முறிந்து, படுத்த படுக்கையாய் இருந்தவரை, அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் திருசந்திரன். இவர், கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நடந்த வாகன விபத்தில் சிக்கி, தண்டுவட எலும்பு முறிந்து நடக்காத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். கால்கள் செயலிழந்த போதிலும், அவ்வப்போது எழுந்து உட்கார்ந்து தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார். சென்ற நான்கு மாதத்துக்கு முன்பு, இவரின் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டதால், எழுந்து உட்கார முடியாமல் தத்தளித்தார்.நாளடைவில் திருசந்திரன் எழுந்து உட்கார முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.
இதையடுத்து, அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலத்தை சந்தித்த அவரது மனைவி காஞ்சனா, தனது ஏழ்மை நிலைமை எடுத்துக்கூறி, மேல் சிகிச்சைக்கு உதவும்படி கேட்டார். இதைத் தொடர்ந்து, திருசந்திரனுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கச் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில், அந்தியூர் மருத்துவமனைக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, 108 அவசர ஆம்புலன்ஸின் மூலம் திருசந்திரனை சென்னைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சிறப்புச் சிகிச்சை அளிக்கப் பரிந்துரை கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார்.