ஈரோடு மாவட்டத்தில் தொடரும் மழை: நிரம்பியது வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர், கோபி சுற்றுவட்டாரப்பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை கொட்டித் தீர்த்தது. இடி-மின்னலுடன் மழை பெய்த நிலையில், சிறுவலூர் சிட்டாசாலை என்னும் இடத்தில் ரோட்டோரம் இருந்த ஒரு பனை மரத்தை, இடி தாக்கி தீ பிடித்து எரிந்தது. இதேபோல் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில், 48.8 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் கொடுமுடி, பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.