விலைவாசி உயர்வு: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயர்ந்து ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும்  - திமுக தலைவர் ஸ்டாலின்.;

Update: 2021-02-22 18:22 GMT

திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பரப்புரை நிகழ்ச்சி ஈரோடு பங்களாபுதூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,

தமிழக முதல்வருக்கு சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. திமுக எதிர்கட்சியாக இருந்து, ஆளுங்கட்சியைச் செயல்பட வைக்கிறது. இந்த ஆட்சியில் சத்துணவு முட்டை, பிளிச்சிங் பவுடர், கொரோனா கிட் வாங்குவது, டெண்டர் விடுவதில் ஊழல் எனத் தொடங்கி டிஎன்பிஎஸ்சி தேர்விலும் ஊழல் செய்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பில் ஆட்சியாளர்கள் மண்ணைப் போட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிடுவார். அதன்பின், அந்த அறிவிப்பை மறுத்து முதல்வர் பழனிசாமி ஒரு அறிவிப்பு வெளியிடுவார். பழனிசாமி பல்டி முதல்வர் என்றால், செங்கோட்டையன் அந்தர்பல்டி அமைச்சராக விளங்குகிறார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், மத்திய மாநில அரசுகள் போடும் வரியால்தான் இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ. 10.39 வரியாக விதித்தது. தற்போது ரூ. 32.98 என வரி உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு வரி ரூ.11.90 -ல் இருந்து 19.90 ஆக உயர்ந்துளது. டீசலுக்கான மத்திய அரசு வரி 4.50 பைசாவில் இருந்து இன்று 31.83 பைசாவாகவும், மாநில அரசு வரி 6.61 பைசாவில் இருந்து, 11.28 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள்விரோத மனப்பான்மையை பெட்ரோல், டீசல் விலை உயர்வு வெளிப்படுத்துகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும். ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும்போது வரிகளைக் குறைக்கச் சொன்ன பாஜக, தற்போது ஆளுங்கட்சி ஆன பின்பு வரிகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் முதல்வர் பழனிசாமி நாடகமாடுகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பெட்ரோல் மீது போடப்பட்ட 30 சதவீத வரியை, 27 சதவீதமாக குறைத்தார். ஆனால், 2017-ல் இந்த வரியை 34 சதவீதமாக பழனிசாமி உயர்த்தினார். திமுக ஆட்சியில் 2006-ம் ஆண்டு டீசல் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து, 23.40 சதவீதமாகவும், 2008-ம் ஆண்டு அதையே 21.40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய முதல்வர் இதனை 2017-ல் 25 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதுதான் வெற்றிநடை போடும் தமிழகமா? அஸ்ஸாம் மாநில பாஜக அரசு வரியை குறைத்து, லிட்டருக்கு ரூ 5 பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணியாக உள்ள அதிமுக ஏன் வரியைக் குறைத்து விலையைக் குறைக்கவில்லை? கேரளா மாநிலமும் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது. டெண்டர் கொடுத்து கமிஷன் வாங்குவதில் உள்ள அக்கறை, மக்கள் பிரச்சினையில் இந்த அரசுக்கு இல்லை.

தானும், தனது குடும்பமும், பினாமிகளும் நன்றாக இருந்தால் போதும் என முதல்வர் பழனிசாமியும், அவரது அமைச்சர்களும் இருக்கிறார்கள். முதல்வர் பழனிசாமி அவரது மாவட்டத்திற்கும், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அவரவர் தொகுதிக்கு மட்டும் நிதியைக் கொண்டு சென்று விடுகின்றனர். அந்த தொகுதியிலும் மக்கள் குறைகளை தீர்க்கவில்லை. பொய்கணக்கு அமைச்சரவையாக இந்த ஆட்சி மாறிவிட்டது. திமுக ஆட்சியில்தான் அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என நான் தான் முதலில் அறிவிப்பு வெளியிட்டேன். தேர்தல் நெருங்குவதால், திடீரென அருந்ததியர் மீது முதல்வர் பழனிசாமிக்கு அக்கறை வந்து, பொல்லானுக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார் என்றார்.

முன்னதாக, நிகழ்ச்சி தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. திமுக துணைப்பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், வடக்கு மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம், டி.என். பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர் எம். சிவபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News