கனமழையால் நிரம்பிய அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2024-09-29 03:45 GMT

வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதை படத்தில் காணலாம்.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த  அணை 33.46 அடி உயரமும், 139.60 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். 

இந்நிலையில், நேற்றிரவு (28ம் தேதி) அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 63 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம், முழுக் கொள்ளளவான 139.60 மில்லியன் கன அடியை இன்று (29ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு எட்டியது.

இதையடுத்து, அணையின் வலது மற்றும் இடது கரை வழியாக 66 கன அடி உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால், அணையின் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பவானி உபகோட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணை இன்று (29ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் முழு கொள்ளளவான 139.60 மி.கன அடியை எட்டி அணையின் வழிந்தோடிகள் வழியாக சுமார் 66 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது.

வரட்டுப்பள்ளம் அணையின் உபரி நீரானது எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், அந்தியூர், பிரம்மதேசம் மற்றும் வேம்பத்தி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று ஆப்பக்கூடல் கிராமம் அருகே பவானி ஆற்றில் கலக்கிறது.‌

எனவே, மேற்கண்ட கிராமங்களின் வழியே வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர் செல்லும் ஓடைகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பினை தெரிவிக்குமாறு வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News