அந்தியூர் புதுப்பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா
அந்தியூர் புதுப்பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னி கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் பண்டிகை துவங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
இது தவிர, குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கவும், மண்ணாலான குழந்தை உருவம், கால்நடைகள் உருவத்தை கொண்டுவந்து கோவிலில் வைத்து நேர்த்திக்கடனாக செலுத்தினர்.இந்த பொங்கல் திருவிழாவில் புதுப்பாளையம் அந்தியூர் கெட்டிசமுத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.